×

கொரோனா வைரஸ் எதிரொலி தர்மபுரியில் முக கவசம் தட்டுப்பாடு

தர்மபுரி, மார்ச் 12: கொரோனா வைரஸ் எதிரொலியாக, தர்மபுரியில் கடைகளில் முக கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ₹3க்கு விற்றது ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் உருவான உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ்,  உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு பொது இடங்களில் கூடுவது மற்றும் பொது இடங்களை திறந்து வைப்பதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முக கவசம் அணி கின்றனர். இதனால் சீனாவில் முக கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 60பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரவாமல் இருக்க, மக்கள் முக கவசம் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தர்மபுரியில் ஆங்கில மருந்துக்கடைகளில் பொதுமக்கள் சென்று முக கவசம் கேட்டால் விற்று தீர்ந்துவிட்டது, என கூறி திருப்பி அனுப்பு கின்றனர். ஒருசில இடத்தில் ₹3க்கு விற்பனையான முக கவசம் ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது. ₹25க்கு விற்பனை செய்தாலும், ஆங்கில மருந்துக்கடைக்காரர்கள், இருப்பு இல்லை என்று கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தர்மபுரி மாவட்ட கலெக்டர், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து எளிதாக முக கவசம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தில் ஆங்கில மருந்துக்கடைகளில் எளிதாக கிடைத்து வந்த முக கவசம், தற்போது இருப்பு இல்லை என்று கூறி ₹25க்கு விற்பனை செய்கின்றனர். அதிக பட்சம் 2 முக கவசம் தான் தருகின்றனர். விலை உயர்வுக்காக காத்திருந்து பதுக்கி வைத்துள்ளனர். தற்போது கேட்டால் இருப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் கடைகளில் சோதனை நடத்தி, மக்களுக்கு எப்போதும் போன்று எளிதாக முக கவசம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு